ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் டுபிளசிஸ், 17 பந்துகளில் 33 ரன்கள் விளாசி, ஆட்டமிழந்தார். மோயின் அலி 26 ரன்கள், சுரேஷ் ரெய்னா 18 ரன்கள், அம்பத்தி ராயுடு 27 ரன்கள், கேப்டன் தோனி 18 ரன்கள், பிராவோ 20 ரன்கள் என அடுத்தடுத்து களமிறங்கிய இவர்கள், தங்கள் பங்கிற்கு ரன்களை குவித்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டும் 49 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய மோயின் அலி, 3 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.