முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், மத்திய அரசு தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மே 1ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்குக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங் பூரண குணம் அடைய வேண்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மன்மோகன் சிங் கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் தவணையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இரண்டாவது தவணை தடுப்பூசி கடந்த 3ஆம் தேதி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







