சென்னை அம்பத்தூர் அருகே இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குப்பம், புதூர், ஒரகடம், கொரட்டூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக
புகார் எழுந்துள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு, அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆத்திரமடைந்த பொதுமக்கள் கள்ளிகுப்பத்தில் உள்ள மின்சார அலுவலகத்தின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்ததனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் அலமேலு தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் படிப்படியாக ஒவ்வொரு பகுதியிலும் மின் சேவை வழங்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
– அறிவுச்செல்வன். சே







