”மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன்” என கர்நாடக துணை முதல்வரும் நீர் மேலாண்மைத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.
இதையடுத்து கடந்த 20 ஆம் தேதி, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. முதலமைச்சராக சித்தராமைய்யாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்றார். மேலும், பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு கடந்த மே 27ம் தேதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் படி முதலமைச்சர் சித்தராமையாவிற்கு நிதித்துறை, கேபினட் விவாகாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு நீர் மேலாண்மை மற்றும் பெங்களூர் நகர்ப்புற வளர்ச்சி மேம்பாடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நீர் மேலாண்மை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மேகதாது அணை விவகாரம் மீண்டும் தமிழ்நாடு-கர்நாடக அரசியலில் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் நேற்று ஜப்பானில் இருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், நீர் மேலாண்மைத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
” மேகதாது அணை தொடர்பாக ரூ.1000 கோடி கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்தப் பணம செலவிடப்படவில்லை. கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டத்தை செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை. அவர்களும் நம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள் தான்.
கர்நாடகாவில் வாழும் தமிழர்களும், தமிழ்நாட்டில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை பயன்படுத்தி வருகின்றனர்; மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன். நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒன்றுபடுவோம்.” என டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.







