’அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’: நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி அறிவுரை

கொரோனா தடுப்பூசி தொடர்பாக அவதூறு கருத்தைப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய முன் ஜாமினை வழங்கி உள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நாடு முழுவதும்…

கொரோனா தடுப்பூசி தொடர்பாக அவதூறு கருத்தைப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய முன் ஜாமினை வழங்கி உள்ளது.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இப்பெரும் தொற்றிலிருந்து மக்களைக் காக்க கொரோனா தடுப்பூசிதான் ஒரே வழி என்பதை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மாநில அரசுகளும், மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதல்ல என்றும் அனைவருக்கும் தேவையில்லை என்றும் அவர் பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி சென்னை வடபழனி காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று முன் ஜாமின் வழங்கி உள்ளது. தடுப்பூசி வாங்குவதற்காக ரூ. 2 லட்சத்தை தமிழக சுகாதார துறை செயலாளர் பெயரில் டி.டி.-யாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை நீதிபதி விதித்தார். மேலும் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பக் கூடாது என்றும் அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் நீதிபதி தண்டபாணி அவருக்கு அறிவுரை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.