முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

புதையலைத் தேடும் நாயகன்: 3 பாகங்களாக உருவாகும் ’கொற்றவை’

தயாரிப்பாளர் சிவி குமார் இயக்கும் ’கொற்றவை’ படம் மூன்று பாகங்களாக உருவாகி வருகின்றன.

பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை உள்பட சில படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர், ‘மாயவன்’, ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியும் இருந்தார். இதையடுத்து இப்போது ’கொற்றவை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் 3 பாகங்களாக உருவாகி வருகிறது. ஓம் ஃபிலிம்சின் எஸ்ஜே குரு மற்றும் மயில் பிலிம்சின் டாக்டர் கே பிரபு தயாரிக்கும் இந்தப் படம், இதுவரை யாரும் முயற்சிக்காத, உண்மை மற்றும் புனைவு கதைக்களத்தில் உருவாகி வருகிறது. தமிழ்மகன் வசனம் எழுதுகிறார்.

படம் பற்றி சி.வி.குமார் கூறும்போது, “ஏற்கனவே வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் தொடர்வது போல இந்த கதையை அமைத்துள்ளோம். கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்னும் பின்னுமான காலத்துக்கு ரசிகர்களை இந்தப் படம் அழைத்து செல்லும். முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘கொற்றவை: தி லெகசி’ என்று முதல் பாகத்துக்கு பெயரிட்டுள்ளோம். சீரான இடைவெளியில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி, மூன்றாவது பாகத்தில் பரபரப்பான கிளைமேக்சுடன் படம் நிறைவடையும்’ என்றார்.

புதையல் வேட்டை தொடர்பான கதையாக அமைந்துள்ள ’கொற்றவை’யில், 2000 வருடங்களுக்கு முன் மறைக்கப்பட்ட புதையலை கண்டறிய நாயகன் எடுக்கும் சாகச முயற்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. ஏன் அந்த புதையல் மறைக்கப்பட்டதென்பதும் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ராஜேஷ் கனகசபை இதில் நாயகனாக அறிமுகமாகிறார். சந்தனா ராஜ், சுபிக்‌ஷா நாயகிகளாக நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

Advertisement:

Related posts

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை!

Karthick

தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!

Gayathri Venkatesan

“அடிக்கல் நாட்டுவதிலேயே ஆர்வம் செலுத்தும் முதலமைச்சர்”-கனிமொழி பேச்சு!

Jeba