செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த கட்டைபழனி கிராமத்தை சேர்ந்தவர் மீனா. வெங்கூர் கிராமத்தில் வேலைக்கு சென்ற போது அப்பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
இதனை கேள்விப்பட்ட மீனா குடும்பத்தார் லோகநாதனுடன் பழகக்கூடாது என மீனாவை மிரட்டி அவரின் அனுமதியின்றி கடந்த ஏப்ரல் மாதம் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர். மேலும் மீனாவை வீட்டுச்சிறைப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மீனா கடந்த 24ம் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி லோகநாதனை கரம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் மீனாவையும், அவரது கணவர் குடும்பத்தினரையும் கொலை செய்யப்போவதாக கடந்த சில நாட்களாக மிரட்டி வந்தனர். இதனால் தனக்கும், தனது கணவர் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை மீனா அளித்துள்ளார்.
இதனையடுத்து மனுவை பெற்றுகொண்ட காவல் ஆய்வாளர் வெங்கடேசன், கோயிலில் தாலி கட்டினாலும் சட்டப்படி திருமணம் செல்லும், எனவே உங்களை யாரும் பிரிக்க முடியாது, உங்கள் மீது கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து இருவரின் குடும்பத்தாரையும் அழைத்து வெங்கடேசன் விசாரணை நடத்தி வருகிறார்.
– வேந்தன்







