பிரதமர் மோடி குறித்த குஷ்புவின் பழைய ட்வீட்டை காங்கிரசார் இணையத்தில் வைரலாக்கிய நிலையில், அந்த ட்வீட்டை ஒருபோதும் நான் நீக்கப்போவதில்லை என குஷ்பு உறுதியாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதையடுத்து கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தற்போதும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் சார்பில், அப்போது காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்புவால் 2018-ஆண்டு போடப்பட்ட பழைய ட்வீட்டை, தற்போது காங்கிரஸ் கையில் எடுத்து அவரை விமர்சித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பு செய்தி தொடர்பாளராக இருந்த போது 2018-ஆம் ஆண்டு மோடி குறித்து ட்விட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் “மோடியின் பெயருக்கான அர்த்தத்தை ஊழல் என்று மாற்றுவோம்” என பதிவிட்டிருந்தார். தற்போது அந்த ட்விட்டை கையில் எடுத்த காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான திக்விஜய சிங், பிரதமர் நரேந்திர மோடியிடம் கடந்த சனிக்கிழமை அன்று காலை ட்விட்டர் பதிவில், “மோடியை விமர்சித்த உங்கள் சீடர்களில் ஒருவரான, குஷ்பு சுந்தர் மீதும் அவதூறு வழக்கு தொடர வைப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, “நான் அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தேன், காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக மட்டுமே எனது கடமையைச் செய்தேன். நான் கட்சித் தலைவரைப் பின்தொடர்ந்தேன். இது அவருடைய மொழி. இதைத்தாண்டி வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை என்று கூறிய குஷ்பு, மேலும் “எனது டைம்லைனில் உள்ள எந்த ட்வீட்களையும் நான் ஒருபோதும் நீக்கவில்லை. இப்போதும் நீக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
https://twitter.com/khushsundar/status/964126977358614528?s=20
தெடர்ந்து பேசிய அவரிடம், ‘மோடி’ என்ற குடும்பப்பெயரை இழிவுபடுத்தியது தவறு இல்லையா என்று கேட்டதற்கு, “எல்லா மோடிகளையும் திருடர்கள் என்று சொல்லும் அளவுக்கு ராகுல் காந்தி கீழே இறங்கிவிட்டார். ஆனால் நான் ஊழல் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தினேன். இதற்கான வித்யாசத்தை கூட பார்க்க முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அவர்களுக்கு தைரியம் இருந்தால், என் மீது வழக்குப்பதிவு போட சொல்லுங்கள். நான் காங்கிரஸ் தலைவர்களுக்கு சவால் விடுகிறேன். அப்படி என் மீது வழக்கு போடப்பட்டால் அவர்களை நான் சட்டப்படி சந்திப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் என் ராம் அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்த குஷ்பு சுந்தர், “ஆமாம், எனது கருத்து நீண்ட காலத்திற்கு முன்பே மாறியிருந்தது. பின்னர் எனது நிலைப்பாட்டை சரிசெய்து கொண்டேன். அதனால்தான் நான் பாஜகவில் சேர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
https://twitter.com/khushsundar/status/1639958478671474688?s=20
2020- ஆம் ஆண்டு, காங்கிரஸ் மேலிடத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், அக்கட்சியில் இருந்து விலகி, பிஜேபியில் இணைந்த நடிகை குஷ்பு, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரானவும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா









