பிரதமர் மோடியின் நல்லாட்சியின் காரணமாக மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு 8 ஆண்டு ஆட்சியை வெற்றிகரமாக முடித்துள்ளது. பாஜக ஆட்சியின் 8 ஆண்டு சாதனைகள் பற்றி மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஒரு மாத காலமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டு சாதனை குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது. நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் ஆர்ப்பரித்தது. ஒரு நடுநிலையான, உறுதியான, மக்கள் நலன் காக்கும் ஆட்சிக்கு விளம்பரம் தேவையில்லை.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக நடக்கும் மாநில அரசு தொடர்ச்சியாக எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தவிக்கிறது. ஆனால் சுட்டிக்காட்ட ஒரு சுணக்கமும் இல்லாமல், சுத்தமான மக்கள் சேவையை, நேர்மையுடன் தூய்மையான ஒரு ஆட்சியை கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி நடத்தி கொண்டிருக்கிறார்.
ஒரு கட்சியின் பொது நிகழ்ச்சிக்கு பணம் கொடுக்காமல் பொருள் வழங்காமல், உணவு உள்ளிட்ட தேவைகளை எதிர்பாராமல் ஏராளமான மக்கள் தாமாக முன் வந்து பிரதமரின் நல்லாட்சிக்கு ஆதரவு அளிப்பதை வரவேற்கிறோம்.
மத்திய அரசானது மக்கள் நலன் காக்கும் திட்டங்களை அளித்து வருகிறது. ஆனால் மாநில அரசோ இலக்கு இல்லாமல் தடுமாறுகிறது. இதன் விளைவாக மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.








