சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1…

சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 12 முதல் 19-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. அந்த சோதனை நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விதமாக சந்திரயான்-2 விண்கலம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டது.

இந்த சந்திரயான்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டு, 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்ததாகவும், ஜூலை 12-ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஒருநாள் கண்காட்சியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்துவைத்தார். இந்த விழாவில் அவர் கூறியதாவது:

இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திராயன் 3 விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இதேபோல் இந்த விண்கலத்தை ஏவும் மார்க்-3 ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்காக பெங்களூரு யூ.ஆர்.ராவ் செயற்கை கோள் மையத்தில் இருந்து சந்திராயன் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

விண்கலத்தில் தரை இறங்குதல், உலாவுதல் மற்றும் லேண்டர், ரோவர் கட்டமைப்புகளை கொண்டுள்ளது. தற்போது பரிசோதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விண்கலம் ஏவுதலின் போது எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு விஞ்ஞானிகள் துல்லியமாக சோதித்து வருகின்றனர். மார்க்-3 ராக்கெட்டின் பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். சோதனைகள் முடிந்தபிறகு சந்திராயன் 3 அடுத்த மாதம் 12 முதல் 19-ம் தேதிகளுக்கு இடையில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்படும்” இவ்வாறு சோம்நாத் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.