சந்திராயன் 3 விரைவில் விண்ணில் ஏவப்படும்?

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 மற்றும் சந்திராயன் 3 விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதள முதன்மை பொதுமேலாளர் சங்கரன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் உலக…

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 மற்றும் சந்திராயன் 3 விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதள முதன்மை பொதுமேலாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, மூன்று நாட்கள் ராக்கெட் கண்காட்சிகள் நடைபெற்றது. இக்கண்காட்சியை வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுமார் 50
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு பயனடைந்தனர்.

நிறைவு நாளான இன்று, நிறைவு விழா நிகழ்ச்சி, வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர்
விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு, அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த விழாவில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஏவுதள முதன்மை பொதுமேலாளர் சங்கரன், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், இஸ்ரோ அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் வின்வெளி ஏவுதளத்தின் முதன்மை பொதுமேலாளர் சங்கரன், ”இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிலையம் மூலம், கேரளாவில் கிடைத்த 75 மில்லிமீட்டர் அளவிலான ராக்கெட்டை கண்டறிந்து, அதன் வடிவத்தில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை உருவாக்கினோம். ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட், அதிக திறன் கொண்டதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் தயாராகி வருகிறது. இது விரைவில் விண்ணில் ஏவப்படவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 1 மற்றும் 2 செலுத்தினோம். தற்போது சந்திராயன் 3 எனப்படும் பெயரில் ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. அதுவும் விண்ணில் ஏவப்படவுள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. உலக அளவில் இந்தியா, விண்வெளி ஆராய்ச்சியில் இரண்டாவது இடத்தில் உள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன், ”மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் செலுத்தி புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும். விண்வெளி ஆய்வு மையம் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களில் மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகிற்கேற்ப, மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.