சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை 3ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட என்விஎஸ்-01 என்ற வழிகாட்டி செயற்கைகோள், 18 நிமிடங்கள் 37 நொடிகளில் வெற்றிகரமாக புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும் என்றும், பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், என்விஎஸ்-1 செயற்கைக்கோள் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அதிக எடை கொண்ட வழிகாட்டி என்விஎஸ்-1 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி மூலம்தான் அனுப்ப முடியும் எனக்கூறிய அவர், அடுத்து 4 செயற்கைக்கோள்களும் ஜிஎஸ்எல்வி மூலமாக அனுப்பப்படும் என கூறினார்.
சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை 3ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் எனக்கூறிய அவர், அது ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் நிலவை சென்றடையும் என தெரிவித்தார். சந்திரயான் – 3 திட்டம் வெற்றி பெற்றால் நிலவை பற்றிய பல்வேறு ரகசியங்கள் தெரிய வரும் என நம்பப்படுகிறது. சந்திரயான் 3 மட்டுமின்றி ககன்யான் சோதனை செயல்முறை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனவும் கூறினார். மேலும் மனிதர்கள் இல்லாத ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








