பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற்ற பாஸ்டின் தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பிரான்சில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாரீசில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக திறந்த ஜீப்பில் வீரர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்த அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்களுக்கு கைகளை அசைத்து வாழ்த்து கூறினார்.
விழா மேடைக்கு வந்த அதிபர் மேக்ரோனை, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி வரவேற்று வாழ்த்து கூறினார். இருவரும் அன்பை பரிமாறிக்கொண்ட நிலையில், ராணுவ வீரர்களின் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இதனை அடுத்து, பாஸ்டில் தின அணிவகுப்பின் ஒரு பகுதியாக பிரான்ஸ் விமானப்படையின் சாசக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரான்சின் தேசியக்கொடி நிறமான நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில் வெளியான வண்ணங்கள் வானத்தை அலங்கரித்தன. தொடர்ந்து ராணுவ விமானங்கள் வானத்தில் அணிவகுத்து சென்றது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. விமான சாகச நிகழ்ச்சியை பிரதமர் மோடியும், அதிபர் மேக்ரோனும் கைகளை தட்டி ரசித்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பாஸ்டின் தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரான்ஸ் ராணுவத்தின் முப்படைகளும் அணிவகுத்து சென்றன. இந்த அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் பஞ்சாப் படைப்பிரிவு வீரர்கள் கலந்து கொண்டு வீறு நடைபோட்டு சென்றனர். முன்னதாக விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி, அதிபர் மனைவி பிரிஜிட் மேக்ரான் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் உரையாடினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









