‘சந்திரமுகி 2’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறு உருவாக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம், 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.
இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா, சிஷ்டி டாங்கே, ரவி மரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கீரவாணி இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள் : “சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து….” – யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்தது ‘Badass’!!
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், சந்திரமுகி-2 படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய சந்திரமுகியை, புதிதாக, வேறு ஒரு கோணத்தில், ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்குப் படமாக, சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் வாசுவுக்கும், அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ்-க்கும் படகுழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.







