இலங்கை சென்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இன்று இலங்கைக்கு சென்றுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் அழைப்பை ஏற்று பா.ஜ.க கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் இலங்கைக்கு தனது நான்கு நாள் பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில் கொழும்புக்கு சென்ற அவர், அங்கிருந்து இன்று மாலை நுவரெலியாவிற்கு தனது பயணத்தினை மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவரை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் உறுப்பினர்கள் அண்ணாமலைக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
அதன்பின் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட அவர், நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டார். நுவரெலியா கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள உழைப்பாளர் தின கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், மலையக தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
அதன்பின் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மக்களிடம் பொருளாதார நெருக்கடி தொடர்பாக கலந்துரையாட போவதாகவும், மத்திய அரசு மூலம் கட்டப்பட்டு வருகின்ற பத்தாயிரம் வீடு திட்டங்களையும் பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.








