முக்கியச் செய்திகள்

சான்றிதழ் கட்டண உயர்வு: அண்ணா பல்கலை. திரும்பப் பெற வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 வகையான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், அவற்றில் திருத்தம் செய்வதற்குமான கட்டணங்கள் 1000% வரை உயர்த்தப்பட்டிருப்பதைக் கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து விட்டாலோ, சேதமடைந்து விட்டாலோ அதற்கு பதிலாக புதிய சான்றிதழ் வாங்குவதற்கு இதுவரை ரூ. 300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அந்தக் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. பிற சான்றிதழ்களின் கட்டணங்களும் குறைந்தது 66% முதல் 400% வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

மதிப்பெண் சான்றிதழ்களில் மதிப்பெண்களோ, பெயர் விவரங்களோ தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அதை திருத்தி புதிய சான்றிதழ் வாங்குவதற்கான கட்டணம் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மதிப்பெண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அது தேர்வுத் துறையின் தவறுதான். தேர்வுத் துறையின் தவறை திருத்தி வழங்க வேண்டியது அதன் கடமை. அதற்காக ரூ.1,000 கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், ஏதேனும் நிறுவனங்களில் பணிக்கு சேரும்போது, அவர்களின் சான்றிதழ் உண்மையானது தானா? என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளும். அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழ்கள் உண்மையா என்பதை சரி பார்த்து சொல்ல வேண்டியது பல்கலைக்கழகத்தின் பணி. அதற்கான கட்டணத்தை ரூ. 2,000 ஆக உயர்த்தியிருப்பது அநீதி. பட்டச் சான்றிதழின் நகலை இரண்டாவது முறையாக வாங்க வேண்டும் என்றால், அதற்கான கட்டணம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கட்டணமே ரூ.13,610 மட்டும் தான். கிட்டத்தட்ட அதே அளவு கட்டணத்தை பொறியியல் படிப்புக்கான நகல் சான்றிதழுக்கு வசூலிப்பது சரி தானா?

பொறியியல் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் அல்ல. அவர்களின் பெரும்பான்மையினர் கல்விக் கட்டணம் செலுத்தவே வாய்ப்பும், வசதியும் இல்லாதவர்கள். இதைக் கருத்தில் கொண்டு சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்கள் தொடர்பான அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்குவது தான் சரியானதாக இருக்கும். சான்றிதழ் கட்டணங்களை உயர்த்துவதால் பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்காது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் தேர்வுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால், அதற்கு மாணவர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து திரும்பப் பெறப்பட்டது. எந்த கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மாணவர்கள் இல்லை என்பது தான் பாரதிதாசன் பல்கலைக்கழக நிகழ்வுகள் சொல்லும் செய்தியாகும்.

சான்றிதழ் கட்டண உயர்வு மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், அதை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து பல்கலைக்கு அரசும் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

உலகின் கவனத்தை ஈர்த்த 6 வயது சிறுமியின் பேச்சு

Ezhilarasan

யானை தந்தங்களை திருடியவர்கள் கைது

Halley Karthik

‘என் மகளை காப்பாற்றுங்கள்’ – நடிகர் தாடி பாலாஜி புகார்

Janani