மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி வலியுறுத்தல்

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதும், வன்முறையை…

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதும், வன்முறையை ஏற்படுத்தியதும் திட்டமிட்ட சதி என்று சிறப்பு விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சிறப்பு குழு பரிந்துரைத்தது. இந்நிலையில், லக்கிம்பூர் விவகாரத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட இரு அவைகளும் மீண்டும் கூடியது. ஆனால், தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் மீண்டும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, லக்கிம்பூரில் நடந்த படுகொலை குறித்து அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் மத்திய அமைச்சரின் தலையிட்டதால் தான் வன்முறை நிகழ்ந்ததாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், விவசாயிகளை கொன்ற மத்திய அமைச்சரை பதவியில் இருந்து நீக்கி, அவரை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.