தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் – ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம், என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை…

தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம், என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என தெரிவித்தார்.

ஒமிக்ரான் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்புடைய ஏழு நபர்களுக்கும் ஒமிக்ரான் தொற்று இருக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், காங்கோவில் இருந்து வந்த பெண் ஒருவருக்கும் எஸ். ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இவர்களின், மாதிரிகளை பெங்களூர் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் ஆய்வு அறிக்கை வந்தவுடன் உறுதியான தகவல் தெரியவரும் என தெரிவித்த அவர் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதற்குமுன், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.