லக்கிம்பூர் விவகாரம்; விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தை விசாரணை செய்யும் குழுவை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில், கடந்த மாதம் அக்டோபர் 3-ம்…

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தை விசாரணை செய்யும் குழுவை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில், கடந்த மாதம் அக்டோபர் 3-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இச்சம்பவம் தொடர்பாக கண்டன குரல்கள் எழுந்தது. மேலும் இதற்கு நீதி கேட்டு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.பி.ரமணா தலைமையிலான குழு, கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் இந்த குழுவை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சிறப்பு விசாரணை குழுவானது நேர்மையாக இயங்குகிறதா என கண்காணிக்க பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியான ராகேஷ் குமார் ஜெயின் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. மேலும் ஷிரோத்கர், தீபிந்தர் சிங் மற்றும் பத்மஜா சவுகான் ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் விசாரணை குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஓய்வுபெற்ற நீதிபதியிடம் இருந்து அறிக்கை பெறப்பட்ட பிறகு, இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.