பெகாசஸ் மூலம் யாரை வேவு பார்க்கப்பட்டது என்பதை மத்திய அரசு நாட்டிற்கு சொல்ல வேண்டும்: டி.ஆர்.பாலு

பெகாசஸ் மென்பொருள் மூலம் யாரை உளவு பார்த்தார்கள் என்பதை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள்,…

பெகாசஸ் மென்பொருள் மூலம் யாரை உளவு பார்த்தார்கள் என்பதை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள், பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் தினமும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்றகுழுத் தலைவர்  டி.ஆர். பாலு, இஸ்ரேலை சேர்ந்த 3 பேர் கண்டுபிடித்த உளவு பார்க்கும் மென்பொருளை பல நாடுகளுக்கு விற்றுள்ளதாகவும், பெகாசஸ் வாங்கிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களுடைய அரசியல் எதிரிகள், நீதித்துறையினர், பத்திரிக்கையாளர் உள்பட சிலரை வேவு பார்த்தாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இது தவறு என்று கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். பெகாசஸ் விவகாரம் தேச நலனுக்கு எதிரானது என்றும், எனவே, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தியாவுக்கு வேவு செயலியை தந்திருப்பதாக சான்பிரான்சிஸ்கோவில் அபிடவிட் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, பெகாசஸ் மூலம் யார், யார் வேவு பார்க்கப்பட்டார் என்பதை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.