மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் இடத்தில் உள்ள வீட்டில் பென்னி குக் வாழ்ந்ததற்கான சாத்திய கூறுகள் இல்லை என மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மதுரையில், கலைஞர் நினைவு நூலகம் கட்டும் இடத்தில் உள்ள வீட்டில், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குக் வாழ்ந்ததாகவும், அந்த வீட்டை அகற்றக் கூடாது என்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 இலட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகம் அமைக்க முதல் கட்டமாக 7 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 2 ஆம் கட்டமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் ஆய்வு செய்யப்பட்டு அந்த இடத்தில், கலைஞர் நினைவு நூலகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட உள்ள இடத்தில் அமைந்துள்ள கட்டடத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் வாழ்ந்ததாகவும் அதனால், அந்த இடத்தில் உள்ள கட்டடத்தை இடிக்க கூடாது என கூறப்பட்டது. ஆனால், பென்னி குக் வாழ்ந்ததாக கூறப்படும் கட்டடம் 1912 ல் பூமி பூஜை செய்யப்பட்டு 1913 ல் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால், கர்னல் பென்னிகுக் 15.01.1841 ல் பிறந்து 09.03.1911 இயற்கை எய்திவிட்டார். அதனால், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் பென்னிகுக் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று அந்த அறிக்கையில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.







