பழங்குடியினர் பட்டியலில் குரும்பா, குரும்பர் ஆகிய சாதிகளை சேர்ப்பது குறித்த தமிழக அரசின் பரிந்துரை இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பழங்குடியினர் பட்டியலில் குரும்பா, குரும்பர்களை சேர்க்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் விஷ்வேஸ்வர் டூடு, பழங்குடியினர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது குறித்த பரிந்துரைகளுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகமும், தேசிய பழங்குடியினர் ஆணையமும் ஒப்புதல் அளித்தால் மட்டும் தான் அவை பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.
2016-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி தமிழ்நாடு அரசு இது தொடர்பாக அளித்த பரிந்துரைகளில் இருந்து குருமன் சாதி மட்டும் தான் ஏற்கனவே பட்டியலில் 18-ஆவது இடத்தில் உள்ள குருமன்ஸ் சாதியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என விளக்கமளித்துள்ளார்.
குருமன்களுடன் குரும்பா, குரும்பர்கள் ஆகிய சாதிகளையும் சேர்க்க வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதியன்று தமிழக அரசு புதிய பரிந்துரை அளித்துள்ளது. தமிழக அரசின் பரிந்துரை இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஷ்வேஸ்வர் டூடு பதிலறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்