புதுச்சேரி முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்?

நிதித்துறையிலிருந்து புதுச்சேரி பட்ஜெட் தொகை ரூ.10,696 கோடியாக்கப்பட்டு உள்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு முழு ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி 5 மாதங்களுக்கான ரூ.3…

நிதித்துறையிலிருந்து புதுச்சேரி பட்ஜெட் தொகை ரூ.10,696 கோடியாக்கப்பட்டு
உள்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு முழு ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி 5 மாதங்களுக்கான
ரூ.3 ஆயிரத்து 613 கோடி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் கூட்டப்பட்ட திட்டக்குழு கூட்டத்தில் இவ்வாண்டு பட்ஜெட், மத்திய அரசின் நிதியுதவி, மாநில அரசின் வருவாய் மற்றும் கடன் பெறுதல் ஆகியவற்றை உள்ளடக்கி சுமார் ரூ.11 ஆயிரம் கோடி என இறுதி செய்யப்பட்டது.

பட்ஜெட் அனுமதி கிடைக்காததால் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய நிதி
அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை முதல்வர் ரங்கசாமி சந்தித்தார். ரூ. 2
ஆயிரம் கூடுதல் நிதியும் கோரினார். பட்ஜெட் கூட்டத்தொடருக்காக ஆளுநர் உரையுடன் 10 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றினார். பட்ஜெட் அனுமதி கிடைக்காததால் ஒரே நாளில் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்தியஅரசின் நிதித்துறை புதுச்சேரி அரசு குறிப்பிட்டிருந்த ரூ.11 ஆயிரம் கோடியை குறைத்து ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அரசு வட்டாரங்களில் விசாரித்தப்போது, புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ரூ.10,696 கோடிக்கு பட்ஜெட்டுக்கு நிதித்துறை ஒப்புதல் அளித்து இன்று மாலை அனுமதி கிடைத்துள்ளது.

புதுச்சேரி அரசு திட்டமிட்படி ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய வெளிக்கடன்களை பெற வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசு அனுமதித்த தொகைக்கு ஏற்ப திட்டமதிப்பீடை திருத்த வேண்டும். இப்பணி முடிந்த
பின்னர் அடுத்த வாரம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நிதியமைச்சர் பொறுப்பு
வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.