காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி கர்நாடக அரசு காவிரி நீரைத் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், “உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழகத்திற்கு கூடுதல் நீரைத் திறந்துவிடக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முறையீடு வைத்தோம். ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. தமிழகத்திற்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே 15 நாட்களுக்கு திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவையும் கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துவதில்லை” என வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்த கர்நாடக அரசு, “காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரியில் நீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது கர்நாடகாவில் அதிக வறட்சி நிலவுவதால், அதிக அளவிலான தண்ணீரைத் திறந்துவிட முடியாத சூழல் உள்ளது” எனத் தெரிவித்தது.
தொடர்ந்து வாதிட்ட தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள், “கர்நாடக அரசு ஆணைய உத்தரவைப் பின்பற்றவில்லை. கர்நாடக அணைகளில் சுமார் 73 டிஎம்சி நீர் இருக்கும் நிலையிலும், தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க மறுக்கின்றனர். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பற்றாக்குறை நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




