டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்வு!

டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில், டெல்லி பல்கலைக்கழகம் அருகே ஆண்களுக்கான பிஜி தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதி நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் திடீரென இடிந்து சரிந்து விழுந்தது. இந்தக் கட்டிடத்திற்குள் சுமார் 40 முதல் 50 மாணவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விடுதி உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.