தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை செயல்படுத்துமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணை வந்தது. அப்போது, ஆகஸ்ட் மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்சனை செய்து வருவதாகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்துவதில்லை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பில், தற்போதைய சூழலில் 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரை மட்டுமே திறக்க முடியும் என கூறப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு மட்டும் தண்ணீர் கேட்பதாக கூறிய கர்நாடக அரசு தரப்பு,
கர்நாடகாவில் குடிநீருக்கு தண்ணீர் தேவை உள்ளதால், தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறப்பதில் பிரச்னை உள்ளதாக தெரிவித்தது.
இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.







