”சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும்” – நாங்குநேரி விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி பேட்டி!

நாங்குநேரி விவகாரம் தொடர்பாக சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரங்கேற்றம் மற்றும் சலங்கை…

நாங்குநேரி விவகாரம் தொடர்பாக சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நிகழ்வில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்
கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது..

“ தமிழ்நாடு மாணவர்களுக்கும், தமிழ்நாடு பாடத்திற்கும் நீட் ஏற்புடையது அல்ல, ஆளுநர் இதில் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறாரே தவிர அறிவுப்பூர்வமாக இல்லை. சட்டமன்றத்திற்கு தான் முழு அதிகாரம் உள்ளது.

சட்டமன்றம் தெரிவிப்பதை தான் ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும். சட்டமன்றத்தை அவமதிப்பது சட்டரீதியான குற்றம். நீட்டை  எதிர்த்து இரண்டாம்  முறையும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பும் போது நிராகரிக்கப்படுவதற்கான காரணத்தை ஆளுநர் தெரிவிக்கப்படவேண்டும்.  அதிகார வரம்பை தாண்டி ஆளுநர் செல்கிறார் இது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தின் மூலம்  அனைவருக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.  யாரும் சர்வாதிகாரி கிடையாது. தமிழ்நாடு என்ன விரும்புகிறதோ அதைத்தான் நாம் மாநிலத்தில் செய்ய வேண்டும்.

நாங்குநேரி விவகாரத்தில் மாணவர்களை இதுபோன்று செயல்படுவது அருவருக்கத்தக்கதாக உள்ளது. சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும்.  இதற்கெல்லாம் காரணமாக அமைவது சாதிய உணர்வை தூண்டும் செயல்கள்தான். சாதியக் கட்சி என்று ஒன்று இருக்கக் கூடாது. நாங்குநேரி சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது “ என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.