77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில், யானைகள் தேசியக் கொடிகள் ஏந்தி அணிவகுத்து நின்ற காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 77 ஆவது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முகாம்களில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிகளுடன் அணிவகுத்து நின்றன. முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா மூவர்ண தேசிய கொடி ஏற்ற, அப்போது முகாமில் அணிவகுத்து நின்ற வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி பிளிறி சத்தம் எழுப்பி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.
இந்நிலையில் யானைகள் வளர்ப்பு முகாமில் நடைப்பெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு வருகை புரிந்திருந்தனர். தேசிய கொடிகளுடன் யானைகள் அனிவகுத்து நின்று மூவர்ண கொடிக்கு மரியாதை செய்ததை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் வீடியோ, புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








