முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள் சினிமா

கேரள திரைப்படக் கல்லூரியில் சாதிய அடக்குமுறையா – நடந்தது என்ன?


பரசுராமன்.ப

கட்டுரையாளர்

இந்தியாவில் கல்வி நிறுவனங்களில் தொடர்ச்சியாக சாதிய அடக்குமுறைகளும், மரணங்களும் அரங்கேறும் நிலையில் அதற்கெதிராக மாணவர்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கேரள திரைப்படக் கல்லூரியில் நிகழ்ந்து வரும் சாதிய அடக்குமுறை குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரை.

கேரள மாநிலம் கோட்டயத்தில் கே.ஆர். ​​நாராயணன் நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் விஷுவல் சயின்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் (KRNNIVSA) திரைப்படக் கல்லூரி இயங்கி வருகிறது. கேரள அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்நிறுவனம் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இதன் தலைவராக பிரபல திரைப்பட இயக்குநரும், இருமுறை தேசிய விருது பெற்றவருமான அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளார். இதன் இயக்குநராக முன்னாள் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஷங்கர் மோகன் என்பவர் உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவின் முதல் பட்டியலின குடியரசுத் தலைவர் பெயரில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் இயக்குநர் ஷங்கர் மோகன், அந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களையும், பணியாளர்களையும் சாதிய ரீதியிலான அடக்குமுறைக்கு உள்ளாக்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்நிலையில் கல்லூரியின் இயக்குநர் ஷங்கர் மோகனை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக மாணவர்கள் சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

இயக்குநர் மீதான குற்றச்சாட்டு

கே.ஆர். ​​நாராயணன் திரைப்படக் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இதில் எடிட்டிங் படிப்பிற்கு சரத் எனும் மாணவர் விண்ணப்பித்திருந்தார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்த மாணவருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் இடம் காலியாக இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டது.

இது குறித்து அந்த மாணவர் கூறுகையில், “கட்- ஆஃப் மதிப்பெண் என்ற பெயரில் எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. எடிட்டிங்கிற்கு கட்-ஆஃப் மதிப்பெண் 45 என்றிருக்கும்போது கட்-ஆஃப்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களை மட்டுமே அனுமதி என கல்லூரி நிர்வாகத்தினர் கூறினர். ஆனால், இந்தக் கல்லூரியில் கட்-ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயிப்பது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. ஏனெனில் பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கும் அதே கட்-ஆஃப் மதிப்பெண்ணையே அனைத்து பாடங்களுக்கும் நிர்ணயித்திருந்தாக அந்த மாணவர் கூறினார். இதனையடுத்து, மாணவர் கூட்டமைப்பினரும் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு விதிமுறைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதாக இயக்குநர் மீது புகார்கள் எழுப்பினர்.

இதனையடுத்து 45 மதிப்பெண்களுக்குக் கீழே எடுத்ததாக கூறி நிராகரிக்கப்பட்ட சரத். கல்லூரி நிர்வாகத்திடம்  தனது மதிப்பெண் பட்டியலை கேட்டபோது, பின்னர் தருவதாக கூறி அனுப்பியுள்ளனர். இதன் பின்னர் பலமுறை கல்லூரி நிர்வாகத்தை அழைத்தும் பதிலளிக்கவில்லை, அப்போது தான் இந்த சேர்க்கை முறை ஒரு கேலிக்கூத்து என்பதை உணர்ந்ததாக அந்த மாணவர் கூறினார். அதோடு ஷங்கர் மோகன் தனது விருப்பப்படி மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது புரிந்ததாகவும் சரத் கூறினார். தற்போது சரத் கொல்கத்தாவில் உள்ள சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் மாணவராக உள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனு அளித்து இரண்டு மாதத்திற்கு பிறகே சரத்திற்கு தனது மதிப்பெண் பட்டியல் கிடைத்ததாகவும் கூறினார்.

இதுமட்டுமன்றி அக்கல்லூரியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களும் இயக்குநர் மீது பல்வேறு புகார்களை கூறினர். அந்த வகையில் தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரம் முடிந்தப் பின்னும் அவர்களை ஷங்கர் மோகன் தனது வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பதுடன், தனது வீட்டில் கழிப்பறைகளை வெறும் கைகளால் சுத்தம் செய்ய வைத்துள்ளார். அதோடு தூய்மைப் பணியாளர்களிடம் சாதியை கேட்பது தந்தையின் வேலை குறித்து கேட்பது என தொடர்ந்து சாதிய ரீதியிலான அடக்குமுறையை அவர்களிடம் காண்பித்துள்ளார். இவ்வாறு பல்வேறு சமயங்களில் மாணவர்களிடமும்,  பணியாளர்களிடமும் சாதி பாகுபாட்டை காண்பித்ததே மாணவர்களின் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

தலைவருக்கு கடிதம்

கல்லூரியின் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தி வருவதோடு அதன் தலைவராக இருக்கும் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், “இந்தியாவின் முதல் பட்டியல் இனக் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் பெயரில் இருக்கும் இந்தக் கல்வி நிறுவனத்தில் பட்டியல் இன மக்கள் மீது சாதிய பாகுபாடு காட்டப்படுகிறது. கல்லூரி நடத்தும் திசை என்னும் நிகழ்வில் பட்டியல் இன மாணவர்கள் வேண்டுமென்றே நிராகரிக்கப்படுவதாகவும், இயக்குநர் ஷங்கர் மோகன் கல்லூரியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணிநேரம் முடிந்தும் தன் வீட்டு வேலைகளுக்கு சாதிய அடக்குமுறையோடு ஈடுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டி கடிதத்தில் மாணவர்கள் எழுதியிருந்தனர்.

ஆனால் இந்த கடிதத்தை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் நிராகரித்தார். மேலும், இயக்குநர் ஷங்கர் மோகன் நல்ல குடும்பப் பின்னணி கொண்டவர் என்றும் அந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார்.

பிரபலங்களின் குரல்,

சாதி பாகுபாடு பார்க்கும் இயக்குநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைக்கு, மலையாள திரையுலகினரும் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மலையாள திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் சாதிக்கெதிரான தங்களின் குரல்களை அழுத்தமாக பதிவு செய்துவருகின்றனர்.

அதன்படி கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) மாணவர்களின் போராட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் குழுவாக கலந்துகொண்டனர். மேலும் திரைப்பட விழாவின் முக்கிய இடமான தாகூர் திரையரங்கில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய திரைப்பட தயாரிப்பாளரும், கேரள மாநில சலசித்ரா அகாடமியின் முன்னாள் தலைவருமான கமல் “முற்போக்கு விழுமியங்களை நிலைநிறுத்தும் ஒவ்வொருவரும் சாதிப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடும் நேரத்தில் கேரளாவில் இதை அனுமதிக்க முடியாது. மறுமலர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்திற்கு மாநிலம் செல்ல மாணவர்களாகிய நீங்கள் அனுமதிக்கக் கூடாது” என போராட்டக் கூட்டத்தில் பேசினார்.

இதே போன்று இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆஷிக் அபு கல்லூரி இயக்குனர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் எனப் பேசினார். அதோடு “இது போன்ற குற்றச்சாட்டுகள் வேடிக்கையானது அல்ல எனவும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் இது போன்ற எந்த பிரச்சனையும் மிகத் தெளிவான குற்றமெனவும் கூறினார்.

அவரைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டத்தில் பேசிய ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’இயக்குநரும், திரைக்கதையாசிரியருமான ஜியோ பேபி, ”கல்வி நிறுவனங்களில் நடைபெறும் இதுபோன்ற அநீதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயதானவர்களின் மனநிலைதான், காரணம் எனப் பேசினார். ஒவ்வொரு முறையும் இதே பிரச்சனையை நான் தொடர்ச்சியாக  இங்கு பார்க்கிறேன், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தை நாம் இங்கு உருவாக்கியுள்ளோம். எனவே இதனை அவமானத்தின் மையமாக மாற நாம் அனுமதிக்கக் கூடாது, ”என்று பேசினார்.

 

இதனையடுத்து திரைப்படம் மற்றும் நாடக நடிகரான சஜிதா மடத்தில் பேசுகையில் இயக்குனர் மோகனின் சாதி பாகுபாடு குறித்து கல்வி நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை பற்றி பேசினார். அப்போது ”கல்வி நிறுவன தலைவர்களுக்கு சாதி பாகுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். “ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கி  நாம் நம்மை உலகிற்கு அறிமுகம் செய்து கொள்ள முடியும்போது ஜாதி பாகுபாடு பற்றி உணர வேண்டிய அவசியமில்லை என நினைக்கும் நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை, என கூறினார்.   

இந்தப் போராட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் மகேஷ் நாராயணன், பிரதாப் ஜோசப், விது வின்சென்ட், கிரிஷாந்த் மற்றும் கமல் கே எம், இசையமைப்பாளர்கள் பிஜிபால் மற்றும் ஷாபாஸ் அமன் ஆகியோர் IFFK அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு வழங்கினர்.

The Women in Cinema Collective (WCC) அமைப்பு கே.ஆர் . நாராயணன் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தனது ஆதரவை வழங்கி  “அடிப்படை உரிமைகள் மறுப்பு, எல்லா விதமான பாகுபாடு, பாதுகாப்பற்ற சூழ்நிலை போன்றவை சினிமா மற்றும் ஊடகத் துறையில் பணிபுரிபவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். எனக் கூறி மாணவர்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இவர்களோடு பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான பார்வதி திருவோடும் மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடி அவர்களின் போராட்டத்திற்கு தனது  ஆதரவை வழங்கினார்.

அரசுக்கு கடிதம் 

இத்தனை புகார்கள் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் இயக்குநர் ஷங்கர் மோகன் மீது  இதுவரை துறை ரீதியான எந்த நடவடிக்கையும், விசாரனையும் நடத்தப் படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மாணவர் கூட்டமைப்பினர்  இந்தப் பிரச்னை குறித்து கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்துவுக்கு புகாரளிக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரனை நடத்த உத்தரவிட்டார். இந்தகுழு கடந்த சனிக்கிழமை கல்லூரி வந்தடைந்த நிலையில் கல்லூரியின் இயக்குநரை பலமுறை தொடர்பு கொண்டும் இயக்குநர் ஷங்கர் மோகன்அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது . இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் மோகன் பதவி விலகும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என மாணவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பரவலாக கல்வி நிலையங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கலில், இடஒதூக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைப்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது. அதே போல் பட்டியல் இன மாணவர்கள் மீது சாதிய ரீதியிலான அடக்குமுறையும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. மேலும் அவர்கள் தங்களின் படிப்பைத் தொடரவே நீதிமன்றம் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையும் மாணவர்களை போராடும் சூழலுக்கு தள்ளும் கல்வி நிறுவனங்களின் செயல்களும் மாற வேண்டும் என்ற நோக்கத்தில் கேரள அரசு கே.ஆர் நாராயணன் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வரும் சாதிய அடக்குமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

 

-பரசுராமன்.ப 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

Web Editor

முதல் கிரிக்கெட் பெண் வர்ணனையாளர் சந்திரா நாயுடு மறைவு!

Halley Karthik

விஜயகாந்த் உடல்நிலை; நலம் விசாரித்த பிரதமர்

Arivazhagan Chinnasamy