“சினிமாவில் கதாநாயகன் தோன்றுவது போல திடீரென சாதிய வன்கொடுமையை ஒழிக்க முடியாது” – திருமாவளவன் எம்.பி

சினிமாவில் கதாநாயகன் தோன்றுவது போல திடீரென தோன்றி சாதிய வன்கொடுமை மற்றும் பாகுபாடுகளை ஒழிக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆக்ஸ்ட் 17 ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு நிர்வாகிகளை ஆயத்தப்படுத்தும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொணடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணி வெற்றி பெறும் என மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், தேர்தல் முடிவுகள் தலை கீழாக மாறிப்போனது. அரசியல் அரங்கில் சிறுத்தைகள் (விசிக) தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறோம். 16 ஆண்டுகளுக்கு முன் தமிழர் இறையாண்மை மாநாட்டை நடத்தி உள்ளோம். தமிழ் தேசியத்தை ஒட்டி தமிழர் இறையாண்மை மாநாடு நடத்தி இருக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து என தொடர்ந்து பேசி வருகிறோம். ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

மாபெரும் இயக்கமாக விசிக

இந்த இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட ஒவ்வொருவரும் தங்களால் ஆன பங்களிப்பை செலுத்துவதன் மூலம் வலிமை பெற்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. பொருளாதார வலிமை பெற்ற யாரும் நம்மோடு இல்லை. தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் யாரும் இந்த இயக்கத்திற்கு பெரிதாக நிதி அளிப்பதற்கு தயாராக இல்லை. சம காலத்தில் துவங்கப்பட்ட பல இயக்கங்கள் காணாமல், வலுவிழந்து நீர்த்துப் போயுள்ளன. யாருடைய தயவும் இல்லாமல் சொந்த கைகளை ஊன்றி கரணம் போட்டு ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக விசிக பரிணாமம் அடைந்துள்ளது. விசிக தேர்தலுக்காக உருவான இயக்கம் அல்ல, மக்களுக்காக உருவான இயக்கமாக விசிக செயல்படுகிறது. விசிக பதவிக்கான இயக்கமாக அல்லாமல் மக்களின் பாதுகாப்பாக செயல்படுகிறது. எத்தனை சுனாமிகள் அடித்தாலும் விசிக சேதப்படாமல் உள்ள இயக்கமாக உள்ளது.

திருமாவளவனிடம் யாரும் இல்லை?

திருமாவளவனிடம் யாரும் இல்லை என சிலர் சமூக வலைதளங்களில் சொல்கிறார்கள். திருமாவளவனிடம் பதவி மட்டும் நோக்கமாக கொண்டு வந்தவர்கள் யாரும் இல்லை. இன்னும் எவ்வளவு வாரலாம் என்றவர்கள் யாரும் இல்லை. ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதே வீரியத்தோடு என்னை சுற்றி நிற்கிறார்கள். யாரும் ஆட்சிக்கு வரலாம், யாரும் அதிகாரத்திற்கு வரலாம். தேர்தலில் வென்று சாதிப்பது வேறு. கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து, அவர்களை அரசியல்படுத்துகிற அரசியல் வேறு. நாம் சாதாரண மக்களையும் அரசியல்படுத்துகிற வேலையை செய்கிறோம். மக்களை அரசியல்படுத்தி விட்டால் போதும் மாற்றங்கள் தன்னியல்பாக வரும்.

ஆள் பிடிப்பது அல்ல!

சினிமாவில் கதாநாயகன் தோன்றுவது போல திடீரென்று தோன்றி சாதிய வன்கொடுமையை ஒழிக்க முடியாது. திடீரென்று ஒருவர் தோன்றி பெண் உரிமைகளை, பாகுபாடுகளை ஒழிக்க முடியாது. அதற்கு நீண்ட நெடிய அரசியல்படுத்துதல் தேவை. தேர்தல் நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் ஆட்சி மாற்றம் நிகழ்த்த முடியும். எப்படி வேண்டுமானலும் ஆட்சியை கைப்பற்ற முடியும். ஆனால், கூட்டிக் கழித்து பார்த்தால் சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது. அரசியல்படுத்துதல் என்பது ஆள் பிடிப்பது அல்ல. பிற கட்சியிலிருந்து ஆள் பிடித்து கொண்டு வந்து தன் கட்சியில் சேர்ப்பது அல்ல” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.