தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக கடந்த 2021 முதல் 2023 வரை செந்தில் பாலாஜி இருந்தார். அக்காலகட்டத்தில் தமிழ் நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சுமார் 45 ஆயிரம் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த கொள்முதலில் ரூ. 397 கோடி ஊழல் நடந்திருப்பதாக அதிமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த ஊழலில் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கும் தொடர்ப்பு இருப்பதாக கூறி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன் படி மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் 1987ம் ஆண்டு தொடங்கி அன்று எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறையில்தான் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்படுகிறது. மின்மாற்றிகள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை. மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.




