பாடலாசிரியர் சினேகனின் பெயரை தவறாக பயன்படுத்தி நன்கொடைகளை பெற்றதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய பாஜக-வை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமியின் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினேகன் என்கிற அறக்கட்டளையை திரைப்பட பாடலாசிரியர் சினேகன் நடத்திவரும்
நிலையில், பாஜக-வில் உள்ள நடிகை ஜெயலட்சுமி சினேகம் என்கிற அறக்கட்டளையை
உருவாக்கி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நடிகை ஜெயலட்சுமி மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் சினேகன் அளித்த புகாரில், ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் கவிஞர் சினேகன் அளித்த புகாரில், தன் மீது
பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை ஜெயலட்சுமி சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலட்சுமி தரப்பில் தவறாக நன்கொடை பெற்றதாக எவரும் புகார் அளிக்கவில்லை என்றும், தன்னுடைய சினேகம் அறக்கட்டளையின் வங்கி கணக்கு நடப்பு கணக்காகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவே அறக்கட்டளையை உருவாக்கி சொந்த வருமானத்தில் இருந்தே பெரும் நிதியை செலவிட்டதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தெரியாத நபர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. சினேகன் அளித்த பொய் புகாரில் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், நற்பெயரை கெடுக்கும் வகையில் சென்னை திருமங்கலம் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தற்போது வரை முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளவில்லை என்பதால், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, திருமங்கலம்
காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் முன்னேற்றம் உள்ளதாகவும்,
ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, இந்த வழக்கு விசாரணைக்கு
உகந்ததல்ல என கூறி, ஜெயலட்சுமி மனுவை நிராகரிக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து பாஜக-வை சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து
செய்ய மறுத்த நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.







