சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் படங்கள் இடம் பெறாதது தொடர்பான வழக்கில் இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் விளம்பரத்திற்காக பெருமளவிலான பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது. ஆனால் தமிழக ஆளும் கட்சி இதனை தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக் கொண்டது. இந்நிகழ்விற்கான விளம்பரங்களில், இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதல்வரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.
ஆகவே, ” 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருந்தார். இதேபோல், மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா தரப்பில் அவரது வழக்கறிஞர் சண்முகநாதன், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி முன்னிலையில் முறையிட்டார்.
அப்போது, இந்த வழக்கை இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தனர். மோடியின் புகைப்படங்கள் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் வைக்கப்படாதது நேற்று சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








