வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 17 பேருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. அவ்ற்றின் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா உள்பட ஆறு பேருக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே 2 ஜி வழக்கில் 2017ல் டில்லி சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராசாவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.







