தனிமனிதர்களின் பயணங்கள் தன்னில் மாற்றத்தையும் தலைவர்களின் பயணங்கள் சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பார்கள். அப்படி, தேசிய அளவிலும் தமிழ்நாட்டிலும் கவனம் பெற்ற தலைவர்களின் நடைபயணங்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்….
இந்திய விடுதலைக்கு முன்பு தேசத் தந்தை காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் மிக முக்கியமானது தண்டி யாத்திரை. அன்றைய பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து, 1930 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம், சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரைக்கு, 24 நாட்களில், 386 கி.மீ தூரம், ஆயிரக்கணக்கான தேசபக்தர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார் காந்தியடிகள். அதேநேரத்தில், தமிழ்நாட்டில் ராஜாஜி, வேதரத்தினம் பிள்ளை உள்ளிட்டோர் திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்கு நடைபயணம் மேற்கொண்டனர். இந்த யாத்திரை நாடுமுழுவதும் விடுதலை வேட்கை மேலும் தீவிரப்படுத்தியது.
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழர் படை
கடந்த 1938 முதல் 1965ம் ஆண்டு வரை மத்திய அரசின் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள், திக. திமுக, தமிழ் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் மாணவர்கள், நடத்திய தொடர் போராட்டங்கள் தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியத்துவம் பெற்றவை. குறிப்பாக 1938ல் திருச்சியில் இருந்து சென்னையை நோக்கிய தமிழர் பெரும்படையின் நடைபயணம், மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. திருச்சியில் பேரணி சென்ற மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியரும் நடந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 1982 ம் ஆண்டு, பிப்ரவரி 15 ம் தேதி மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை நடைபயணம் மேற்கொண்டார் திமுக தலைவர் மு.கருணாநிதி. கடவுள் மறுப்பாளராக அறியப்படும் அவர், கோயில் விவகாரத்திற்காக இந்த பயணத்தை மேற்கொண்டார். திருச்செந்தூர் முருகன் கோயில் வைர வேலை மீட்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மர்ம மரணத்திற்கு நீதி வேண்டும், பால் கமிஷன் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த நடைபயணம் அமைந்தது. இது அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நமக்கு நாமே என்கிற முழக்கத்தை முன் வைத்து, அப்போது திமுக பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய பயணம் சென்னையில் நிறைவடைந்தது. தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு முந்தைய தேர்தலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக பிரதான எதிர்க்கட்சியாக, வலிமையான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது.
தொடர்ந்து 2018 ஏப்ரல் 7ம் தேதி, முதல் 13ம் தேதி வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி காவிரி உரிமை மீட்பு பயணத்தையும் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். திருச்சி முக்கொம்பில் தொடங்கி கடலூரில் நிறைவு பெற்றது இந்த பயணம். இந்த பயணம் விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2019 மக்களவை, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுகவிற்கு பெரும் வெற்றியை டெல்டா மாவட்டங்கள் கொடுத்தன.
நடைபயண நாயகன் வைகோ
அதிமுக, திமுக-விற்கு மாற்றாக களமிறங்கிய வைகோ, 1994ல் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 50 நாட்களுக்கு மேல் 1,500 கி.மீ தூரம் நீண்ட நடைபயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து நதிகள் இணைப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ எதிர்ப்பு, முழு மதுவிலக்கு என அதிக நடைபயணங்களை நடத்தியுள்ளார். இதனை நடைபயண நாயகன் என்றும் வைகோ அழைக்கப்படுகிறார். வைகோவின் நடைபயணங்கள் பொதுமக்களால் வரவேற்கப்பட்டாலும், தேர்தல் அரசியலில் அவை பெரிதாக கைகொடுக்கவில்லை என்பது நடைமுறை முரணாக இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து இந்த ஆண்டு, நெய்வேலி நிலக்கரி நிறுவனமான என்.எல்.சியை வெளியேறக் கோரியும் இதன் விரிவாக்கப்பணிகளுக்கு வேளாண் நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று வலியுறுத்தி அன்புமணி நடை பயணம் நடத்தினார். இதை வலியுறுத்தி மனித சங்கிலி கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன.
ஜூலை 28ம் தேதி அன்புமணி ராமதாஸ் தலைமையில், என்.எல்.சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி உள்ளே நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அன்புமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் – காவல்துறையினர் இடையில் தள்ளுமுள்ளு, கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என போராட்ட களம் போர்க்களமாக மாறியது.
தமிழ்நாடு கடந்து கவனம் ஈர்த்தவை
தமிழ்நாடு கடந்து, 1983-ல் ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சந்திரசேகர் நடைபயணம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக அவர் பிரதமராகும் நிலை வரை உயர்ந்தார்.
கடந்த 1989-90 களில் பாஜக மூத்த தலைவர் அத்வானி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி ரத யாத்திரை மேற்கொண்டார். அவர் ஏற்படுத்திய அடித்தளத்தில் இன்றைக்கு ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை நிறுவிய என்.டி.ராமராவ் ஆந்திரத்தை மீட்போம் என்ற பயணம், தொடர்ந்து ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் நடத்திய நடைபயணங்கள் உள்ளிட்டவை அரசியலில் தாக்கத்தையும் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தின.
ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைப்பயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 2016 செப்டம்பரில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 26 நாட்கள் பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு இறுதியில் கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கிய, பாரத் ஜோடோ என்கிற இந்திய ஒற்றுமைப் பயணம் தேசிய அளவில் கவனம் பெற்றது. காங்கிரஸ் கட்சிக்க்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளதாக சொல்கின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற நடைபயணத்தை மேற்கொள்கிறார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி, 5 கட்டங்கள், 10 பொதுக்கூட்டங்கள், 168 நாட்கள், 234 தொகுதிகள், 1,700 கி.மீ தூரம் என இந்த பயணத்தை ஜனவரியில் சென்னையில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செல்லும் இந்த பயணம் வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார களமாக அமையும். மத்திய அரசின் திட்டங்கள், சாதனைகளை விளக்கும் ஒரு லட்சம் புத்தகங்களை விநியோகிக்கவும் உள்ளனர்.
தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் அமித் ஷா உள்ளிட்ட பாஜக-வின் மூத்த தலைவர்கள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். எனவே, பாஜகவை மட்டுமல்ல கூட்டணியையும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடைபயணம் அமையும், அதேநேரத்தில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் இருக்கும் என்கிறார்கள். இந்த பயணத்திலும் பொதுக்கூட்டங்களும் பெருமளவு பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் கட்சிகளால் உற்று நோக்கப்படும், இந்த பயணம் பொது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா? பாஜக வியூகம் வெல்லுமா? அண்ணாமலையின் அடுத்த அதிரடி என்ன? பொருத்திருந்து பார்க்கலாம்….
இது குறித்து சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான காணொளியைக் காண:












