கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரு நாட்கள் அரசுப் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், டெல்லியில் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, இருநாட்டின் ராணுவம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சந்திப்புக்கு பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருநாட்டின் உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக ஆண்டனி பிளிங்கன் கூறினார். கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது எனக்கூறிய அவர், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரோனா அச்சுறுத்தலுக்கு முடிவுகட்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனா 2வது அலையின்போது இந்தியாவிற்கு உதவியதற்காக அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார். தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விநியோகத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது என கூறிய அவர், அமெரிக்காவுடன் இணைந்து உலகளவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.









