சட்டமன்ற உறுப்பினருக்காக கார் வழங்க முதலமைச்சரிடம் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் அந்தந்த ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைத் திறம்படக் கண்காணித்திட ஏதுவாக, தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பு கட்சிகள் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்து பேசினர்.
இதுதொடர்பாக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், “இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறேன், அதே நேரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வரை வந்த முதலமைச்சரின் பார்வை, சட்டமன்ற உறுப்பினர் வரை வரவில்லை என்ற ஆதங்கம் இங்கு இருக்கிறது” என்று கூறினார்.
எனக்கு கூட வேண்டாம், தேவைப்படுகின்ற சட்டமன்ற உறுப்பினருக்கு நீங்கள் ஒரு கார் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும் என்ற அவர், “ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சாயத்து தலைவருக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுடைய கருத்தைக் கேட்கும் அளவிற்கு மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரிகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும். அதேநேரத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு தேவைப்படுகின்ற நிதியை வழங்க வேண்டும். எல்லா சட்டமன்ற உறுப்பினருக்கு அரசு சார்பிலோ அல்லது முடிந்த அளவிற்கு வட்டி இல்லாத ஒரு கார் கொடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
அப்போது பேசிய அப்பாவு சட்டமன்ற சபாநாயகர், மத்திய அரசிடம் பரிந்துரைத்து பணம் வாங்கி கொடுத்து விடுங்கள் என கிண்டலாக தெரிவித்தார்.







