கரூரில் திடீரென்று ஓடும் காரில் தீ பற்றி எரிந்த நிலையில், காரின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் குடும்பத்தினருடன் காரில் கரூர்
வந்துள்ளார். லைட்ஹவுஸ் பகுதியில் குடும்பத்தினரை இறக்கி விட்டு, அங்கிருந்து
பஞ்சமாதேவி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் காரை நிறுத்துவதற்காக 5 ரோடு பகுதியில் அமைந்துள்ள பழைய நீதிமன்ற சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று காரின் முன் பகுதியில் புகை வந்ததை கண்டு பொதுமக்கள் அவரிடம்
தெரிவித்துள்ளனர். உடனடியாக காரை விட்டு சுரேஷ் வெளியேறிய நிலையில், காரின் இஞ்சின் அமைந்துள்ள முன் பகுதியில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில், அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். காரின் முன் பகுதி முழுவதும் எரிந்த நிலையில், பொதுமக்கள் உதவியால் காரின் உரிமையாளர் சுரேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் கரூர் மாநகரப் பகுதியில் இரவு நேரத்தில் ஓடும் காரில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரூபி.காமராஜ்







