தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் லாரியின் பின்புறத்தில் கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானாவின் ஹைதராபாத் வெளிவட்ட சம்ஷாபாத் எக்ஸிட் 16 அருகே அதிவேகமாக வந்த கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கார் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் இரு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காரை மீட்க கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. தெலங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த இக்குடும்பத்தினர், ஹைதராபாத் சனத்நகரில் வசித்து வந்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில்
கார் ஓட்டுநர் தூங்கியதே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.