ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை ரத்து

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ்,…

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் தடை விதித்ததாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டினர்.

அதேசமயம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது சிலர் பலியான நிலையில் அந்தப் போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோதும் மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தி வருவதாகக் கூறினர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளதாகவும், ஆன்லைன் விளையாட்டு திறமைகளுக்கான விளையாட்டு என்றும் சூதாட்டம் இல்லை எனறும் வாதிட்டனர்.

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், ஆன்லைன் விளையாட்டால் நிறைய பேர் நஷ்டம் அடைந்ததாகவும் பொது நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் இயற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சட்டத்தை ரத்து செய்தனர்.

உரிய விதிகள் இல்லாமல் ஆன் லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை என்றும் தீர்ப்பளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.