ஏழை எளிய மக்கள், ரேஷன் கடைகள் மூலம் தேவையான உணவுப் பொருட்களைப் பெறுவதில் இருந்து வந்த பிரச்னைகள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஏழை மக்களுக்கான நலத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். இதில், குஜராத்தைச் சேர்ந்த பயனாளர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், குடிமக்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகக் கூறினார். அரசின் கிடங்குகளில் உணவுப் பொருட்களின் இருப்பு அதிகம் இருந்தபோதிலும், முறையான விநியோகம் இல்லாததால், ஏழை எளிய மக்கள் பட்டினியால் வாடும் நிலை கடந்த காலங்களில் இருந்ததாகக் பிரதமர் குறிப்பிட்டார். மற்றொரு புறம், பல போலி பயனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்று பயன் அடைந்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கோடிக்கணக்கான போலி பயனாளிகள் நீக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்கள் பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்யப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக, ரேஷன் கடைகள் மூலம் தேவையான உணவுப் பொருட்களைப் பெறுவதில் இருந்து வந்த பிரச்னைகள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.







