2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ள நிலையில், அன்றாட வாழ்வில் சிறுதானியங்களின் பயன்பாட்டிற்கான அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
சிறுதானியங்களின் தாயகமான இந்தியாவுடன் 70 நாடுகள் இணைந்து வலியுறுத்தியதை அடுத்து, 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா சபை அறிவித்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் முன்னெடுத்துள்ளன. இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் சிறுதானிய கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், 7 சிறுதானியங்களை கொண்டு 555 வகையான உணவுகளை சமைத்து உலக சாதனை நிகழ்த்தினார்கள் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள். சாமை, திணை, வரகு, கேழ்வரகு, கம்பு, உள்ளிட்ட சிறுதானியங்களை மதிப்புக் கூட்டு உணவாக மாற்றி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
மேலும், இளைய தலைமுறையினர் விரும்பி உண்ணும் நூடுல்ஸ், சேமியா, பீட்சா உள்ளிட்ட துரித உணவு வகைகள் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, தோசை மாவு, இட்லி மாவு, ஆல்கஹால் இல்லாத மது, இனிப்பு வகைகள், தேநீர் வகைகள், என பல்வேறு உணவுப்பொருட்கள், சிறுதானிய உணவுப் பொருட்களாக கண்காட்சியில் மாறியிருந்தது பார்வையாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
அரிசி, கோதுமை இவற்றின் தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில் சிறுதானியங்களின் சாகுபடியின் தேவையும் அதிகரித்துள்ளது. ஏனெனில், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான திகழும் சிறுதானியங்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இவற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள், புற்றுநோயின் அபாயத்தை குறைக்கின்றன. அதுமட்டுமின்றி ரத்த செல்களை உற்பத்தி செய்வது, உடலில் கொழுப்பு தங்குவதை தடுப்பது, தசைகள் சேதமாவதை தடுப்பது என உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் சிறுதானியங்களின் பங்கு அளப்பரியது.
கண்காட்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்களும் பொதுமக்களும் சிறுதானியங்கள் உணவு வகைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். நவீன காலகட்டத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல்வேறு நோய்கள் வாழ்வின் ஓர் அங்கமாகி விட்டது. உணவே மருந்து என்ற காலம் தற்போது மருந்தே உணவாக மாறி வருகிறது. இந்த சூழலில் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கிய வாழ்வுக்கு வலுவான அடித்தளம் அமைக்கலாம்.
– கோவை செய்தியாளர் மாரியப்பன் & தருண், நியூஸ் 7 தமிழ்