தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், “நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து தடைகளையும் தகர்த்து, சதிகாரர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு கம்பீரமாக அவையில் உதயநிதி அமர்ந்துள்ளார். மக்கள் விவாதங்களை நேரலையில் பார்க்கிறார்கள். பல்வேறு கருத்துகள் மக்கள் மத்தியில் எழுகின்றன. அந்தக் கருத்தை என் கருத்தாகக் கூறுகிறேன்.
சிறுபான்மைத் துறை வாரியத் தலைவராக பிலிக்ஸ் ஜெரால்டை இந்த அரசு நியமித்தது. இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்கள் அரசியல் தொடர்பான விவாதங்களில் பங்கேற்கக் கூடாது. அவர் இதுபோன்ற அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும். அப்படியில்லை என்றால், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.
இதற்குப் பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர், “சட்டப்பூர்வப் பதவி வகிப்பவர் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்பது அவருடைய விருப்பம். சட்டப்பூர்வமாகத் தவறு இருந்தால் விவாதிக்கலாம். திண்டுக்கல் லியோனி வாரியப் பொறுப்பில் இருந்தார். அவருடைய பணியே எதிர்க்கட்சியை விமர்சிப்பதுதான். பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் இருந்தார்கள். தவறு இருந்தால் கூறலாம்” எனக் கூறினார்.
இதற்குப் பதில் அளித்த சபாநாயகர், “சட்டப்பூர்வப் பதவிக்கும் சாதாரண வாரியத் தலைவருக்கும் வித்தியாசம் உள்ளது. அதை எப்படி செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்யலாம்” எனத் தெரிவித்தார்.
இறுதியாகப் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், “என்னுடைய கருத்தைக் கூறிவிட்டேன். சபாநாயகர் முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.




