கொள்கையைக் காப்பாற்ற எதையும் செய்யலாம் எதையும் இழக்கலாம், ஆனால் பதவியைக் காப்பாற்ற எதையும் செய்துவிடக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
டி.கே. சீனிவாசன் அவர்களின் படைப்புகளை, புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என மூன்று தொகுப்புகளாகப் பிரித்து நூற்றாண்டு சிறப்பு வெளியீடாகக் கொண்டு வந்துள்ளனர். அதனை முதலமைச்சர் வெளியிடத் திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டி.கே.எஸ் குறித்துக் கூற வேண்டும் என்றால் கலைஞரைப் போலவே சிறந்த பேச்சாளராகச் செயல்படுபவர் தான் டி.கே.எஸ் இளங்கோவன். கலைஞரிடம் அதிகம் திட்டு வாங்கியவர் டி கே எஸ் இளங்கோவன். உரிமையோடு கலைஞர் அவரை திட்டுவார். அவர் பிள்ளைகளைக் கூட கலைஞர் அதிகம் திட்டியதில்லை. ஆனால் டி கே எஸ் ஐ அதை விட அதிகமாக உரிமையோடு திட்டுவார் என பேசினார்.
மேலும் பேசிய அவர், டி.கே.சீனிவாசனுக்கு நன்றியின் கடமையைச் செலுத்தும் விதமாக இந்த விழா நடைபெறுகிறது. நீதிக்கட்சி,பெரியார், அண்ணா,கலைஞர்,திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் எனத் தொடர்ச்சியாகக் கொள்கையில் செயல்பட்டவர். இன்று திமுக தார் சாலையில் பயணம் செய்து வருகிறது. இந்த தார் சாலையை அமைக்கத் தாரோடு உருகிய பலர் இருக்கின்றனர். அதில் ஒரு டி.கே.சீனிவாசன் என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவார் என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், டி.கே.சீனிவாசன் எழுதிய எழுத்துக்களை இன்று படித்தாலும் உணர்ச்சி எழுகிறது. சிலர் உழைக்காமலே வாழ்கின்றனர், சிலர் வாழாமலே உழைக்கின்றனர் என உழைக்கும் மக்கள் குறித்தும், அரசருக்காக நடப்பது போர், மக்களுக்காக நடப்பது புரட்சி என எழுதியுள்ளார். திராவிட இயக்கம் என்றாலே எழுத்தாளர் இயக்கம், பத்திரிகையாளர் இயக்கம்,பேச்சாளர் இயக்கம்,கவிஞர்கள் இயக்கம், பகுத்தறிவாளர்கள் இயக்கம் மொத்தத்தில் அறிவு இயக்கம் எனவே இதுபோன்ற நிறையப் புத்தகங்கள் வெளி வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி கூட்டங்கள் 234 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்துவிடவில்லை. டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு விழாவில் அது முடியவில்லை தொடருங்கள் எனக் கட்சித் தலைவராகக் கட்டளை இடுகிறேன். இளைஞர்கள் இதுபோன்ற புத்தகங்களை வாங்கி படியுங்கள். கொள்கை இருந்ததால் தான் கட்சி ,கட்சி இருந்தால் தான் ஆட்சி என்பதில் நான் உறுதியோடு இருக்கிறேன். கொள்கையைக் காப்பாற்ற எதையும் செய்யலாம் எதையும் இழக்கலாம், ஆனால் பதவியைக் காப்பாற்ற எதையும் செய்துவிட முடியாது என பேசினார்.
மேலும், கள்ளி காளான் படர்ந்து, கட்டாந்தரையாக இருந்த தமிழகத்தை ஒழுங்குபடுத்தி உயர்த்தியவர் தந்தை பெரியார். அந்த நிலத்தில் எப்படிப்பட்ட கட்டிடம் கட்ட வேண்டும் என திட்டமிட்டவர் அண்ணா. திட்டமிட்ட கட்டிடத்தைக் கட்டியவர் கலைஞர் என எழுதி இருக்கிறார் டி.கே.சீனிவாசன். தமிழ்நாடு என்ற கட்டிடத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் உள்ளது என்றும் பேசினார்.







