ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை நிறுத்திவைப்பு

காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிறுத்திவைத்துள்ளார்.  கடந்த 15ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி…

காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிறுத்திவைத்துள்ளார். 

கடந்த 15ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும், கே.எஸ்.அழகிரி ஆதரவாளர் ரஞ்சன் குமார் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி ரூபி மனோகரனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்தார்.

இந்நிலையில் இந்த நடவடிக்கையை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிறுத்திவைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு மேற்கொண்டு வரும் விசாரணைகளையும் நிறுத்திவைப்பதாக தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணை இயற்கை நீதி கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். உரிய முறையில் இந்த விசாரணை நடைபெறவில்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.