விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட பிச்சைக்காரன் முதல் பாகம் தான்.
விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்து அவரே இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் காவ்யா தாபர் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, யோகிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான விஜய் குருமூர்த்தியின் (விஜய் ஆண்டனி) சொத்துக்களை அபகரிக்க அவரது நண்பர்களே முயற்சி செய்கின்றனர். விஜய் குருமூர்த்தியை கொலை செய்து அவருக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்கின்றனர். ஆனால் நினைத்தது ஒன்று, நடந்தது வேறு ஒன்று என்பது போல இது அவர்களுக்கு எதிராகவே திரும்புகிறது. விஜய் குருமூர்த்தியின் சொத்துக்கள் என்ன ஆனது? விஜய் குருமூர்த்தியாக நடிக்க வைக்க வந்தவர் யார்? அதற்கு பிறகு என்ன ஆனது? என்பது தான் பிச்சைக்காரன் 2 படத்தின் கதை.
வழக்கமான தமிழ் சினிமா போலவே ஏழை பணக்காரன் பிரச்னை, அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் போன்றவை இந்த படத்தின் கதையில் இருந்தாலும் சில சில மாற்றங்கள் செய்து புது இயக்குநராக விஜய் ஆண்டனி உருவாகி உள்ளார். அவரது இசையில் வெளியான பல பாடல்கள் ஏற்கனவே பெரிய ஹிட் அடித்தது. இசையமைப்பாளராக மட்டும் அல்லாமல் நடிகராகவும் தன்னை நிரூபித்தார். தற்போது இயக்குநராகவும் தன்னால் முடிந்த அளவுக்கு இந்த படத்தில் நிறைய மெனக்கெட்டுள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தாலும் வழக்கம் போல அவருக்கே உரித்தான அப்பாவியான நடிப்பையே இந்த படத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளில் நம்மை அழ வைக்கவும் முயற்சி செய்துள்ளார்.
நாயகி காவ்யா தாபர் படத்தின் தொடக்கத்தில் கவர்ச்சியாக வந்தாலும், அதன்பிறகு பெரிய அளவில் அவருக்கு வேலை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்திற்கு வலு சேர்க்க முயற்சி செய்துள்ளார். இந்த படத்தில் தேவ் கில், ஜான் விஜய், மன்சூர் அலி கான், யோகி பாபு, ராதா ரவி என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தாலும், கதைக்கு ஏற்ப சில சில இடங்களில் தான் வந்து செல்கின்றனர். நிறைய கதாப்பாத்திரங்கள் கதையின் சுவாரஸ்யத்தை குறைப்பதாகவே தோன்றுகிறது.
மூளை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஆன்டி பிகிலி போன்ற விஷயங்களை ரசிகர்களுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் வழக்கமான கமர்சியல் படம் போலவே இந்த படத்திலும் பாடல்கள், ஏழைகளுக்கு உதவி செய்தல், அரசியல்வாதிகளின் சூழ்ச்சி போன்றவை இருப்பதவே தோன்றுகிறது.
பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, அந்த படத்தில் சில ஃபீல் குட் காட்சிகளும், காதல் காட்சிகளும், சென்டிமென்ட் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். இரண்டாம் பாகத்தில் அண்ணன் தங்கை பாசம் பெரிய அளவில் உதவி செய்திருந்தாலும், அதை தாண்டி பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். குறிப்பாக திரைக்கதை மெதுவாக நகர்வதும் அதிக அளவில் அப்பட்டமாக தெரியும் கிராஃபிக்ஸ் காட்சிகளும் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதையிலும் கிராஃபிக்ஸ் காட்சிகளிலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் பிச்சைக்காரன் 2 பாகம் ஒரு நல்ல முயற்சி என்று சொல்லலாம்.
– தினேஷ் உதய்







