நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள வங்கிகளில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் வைப்பு காப்பீட்டு பணத்தை, 90 நாட்களில் திரும்ப கிடைக்கச் செய்வதற்கான சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று (28-07-2021) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள வங்கிகளில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் வைப்பு காப்பீட்டு தொகையான ரூ. 5 லட்சத்தை, 90 நாட்களில் திரும்ப கிடைக்கச் செய்வதற்கான சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். வங்கிகளில் முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே, DICGC சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக வைப்பு காப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் காப்பீடு வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்றும், இதன் மூலம், 98.3 சதவீத முதலீட்டாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.








