கட்டுரையாளர்: ஆர்.கே.மணிகண்டன்
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து தங்கள் நாட்டினரை மீட்க, பல்வேறு நாடுகளும் விமானங்களை அனுப்பிவரும் நிலையில், இந்தியா அனுப்பிய C-17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானம், ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இது ராணுவப் போக்குவரத்திற்கான உலகின் மிகப்பெரிய விமானமாகும். ஒரு விமானத்தின் விலை 2,700 கோடி ரூபாய் ஆகும். பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட இந்த குளோப்மாஸ்டர் விமானம், ராணுவத் தளவாடங்களையும், வீரர்களையும் சுமந்துகொண்டு, உயர்ந்த மலை உச்சியில் உள்ள சிறிய விமானதளத்திலும் எளிதில் தரையிறங்கக் கூடியது.
C-17 குளோப்மாஸ்டர் விமானம், மணிக்கு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில், காற்றை கிழித்துக்கொண்டு வானில் பாய்ந்து செல்லக்கூடியது. ஒருமுறை எரிபொருளை நிரப்பினால், சுமார் 4,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ந்து பறக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. மேலும், வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியும் கொண்டது. இந்த விமானம் கடுமையான தட்பவெப்ப நிலைகளிலும் எந்த தொய்வும் இன்றி, ஒரே நேரத்தில் 800 வீரர்களையும், 70 டன் எடையுள்ள தளவாடங்கள் அல்லது நிவாரணப் பொருட்களை கொண்டுச் செல்லும் திறன் கொண்டது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு, C-17 குளோப்மாஸ்டர் விமானத்தை அனுப்பி, ஒரே முறையில் 800 பேரை, அமெரிக்க விமானப்படை அழைத்துச் சென்றது. அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட அதே ரக விமானத்தை தான், இந்தியாவும் அங்கு மீட்புப் பணிக்கு அனுப்பி இந்தியர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்கும் இந்த விமானம், லடாக் எல்லையில் உள்ள நமது படைகளுக்கு தளவாடங்கள் கொண்டுச் செல்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.
அமெரிக்க ராணுவ சேவைக்காக 1980-களில் இந்த விமானம், மெக்டோனல் டக்ளஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானம், 1995-ல் அமெரிக்க ராணுவத்தின் தர நிர்ணயத்துறை தெரிவித்த அத்தனை குறைபாடுகளையும் களைந்து, முழுமையாக மேம்படுத்தப்பட்டு, தற்போது உலகின் அதிநவீன ராணுவ போக்குவரத்து விமானங்களில் முதன்மையானதாக திகழ்கிறது. இந்தியாவிடம் தற்போது பதினொரு C-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டவை.
ஒருசில நட்பு நாடுகளை தவிர, வேறு நாடுகளுக்கு இந்த விமானத்தை வழங்கக் கூடாது என்ற கொள்கையின் பேரில், அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உத்தரவுப்படி, தற்போது இந்த விமானத் தயாரிப்பை போயிங் நிறுவனம் நிறுத்திவிட்டது. C-17 குளோப்மாஸ்டர் ரகத்தில், மொத்தம் 279 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அந்தவகையில் கடைசி தயாரிப்பான 279-வது விமானத்தை, பல்வேறு நாடுகளின் கடும் போட்டிக்கு நடுவே, இந்தியா தான் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த ரக விமானம் தற்போது அமெரிக்காவிடமும், இந்தியா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, கத்தார் உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளிடம் மட்டுமே உள்ளன.
2003 மார்ச் 26-ம் தேதி, குர்திஷ் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஈராக் பகுதியில், C-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம், சுமார் ஆயிரம் அமெரிக்கப் படையினர், பாராசூட் முலம் குதித்து தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அண்டார்டிகாவில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சி குழுவுக்கு தேவையான பொருட்கள், ஆண்டுகொரு முறை இந்த விமானம் மூலமே அனுப்பி வைக்கப்படுகிறது, என்பது இதன் திறனுக்கு ஒரு சான்று.
2013 செப்டம்பர் 2-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், C-17 குளோப்மாஸ்டர் விமானம், இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது. போர் காலத்தில் மட்டுமின்றி புயல், மழை, நிலச்சரிவு போன்ற பேரிடர் காலங்களில், இந்த விமானத்தின் சேவை அளப்பரியதாக உள்ளது. மேலும், இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக, இந்த விமானங்களில் ஒன்று தஞ்சையில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், இந்திய பெருங்கடல் பகுதியை, ஒரு ராஜாளி பறவை போல் தீவிரமாக கண்காணித்து வருகிறது C-17 குளோப்மாஸ்டர்.








