கொரோனா தொற்று காரணமாக தமிழகம் – புதுச்சேரி இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் . இதன் காணரமாக தமிழ்நாடு – புதுச்சேரி இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு சரிந்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஏப்ரல் மாதம் முதல் புதுச்சேரிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த சேவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக 50 சதவிகித பயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில், 2,913 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








