இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் லண்டனில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்க முதலே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் 2ஆவது ஓவரில் 4வது பந்தில் பும்ரா வீசிய பந்தில் போல்டு ஆனார். ரன்கள் எதுவும் எடுக்காமல் அவர் ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் ஜோ ரூட்டும் டக் அவுட் ஆனார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை சுருட்டி அருமையான தொடக்கத்தை பும்ரா அளித்தார். மூன்றாவது ஓவரில் பென் ஸ்டோக்ஸை டக் அவுட் ஆக்கி அசத்தினார் பந்துவீச்சாளர் ஷமி.
இதையடுத்து, கேப்டன் ஜோஸ் பட்லர் களம் இறங்கினார். தடுமாறிய இங்கிலாந்தின் ஸ்கோரை உயர்த்த நிதானமாக விளையாடினார். அதே நேரம், 6 வது ஓவரை மீண்டும் பும்ரா வீச, பேர்ஸ்டோ 7 ரன்களில் ஆட்டமிழந்து அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் வந்த லிவங்ஸ்டனையும் 8 ஆவது ஓவரில் வீழ்த்தினார் பும்ரா. ஜோஸ் பட்லர் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
கிரெய்க் ஓவர்டன், பிரைடன் கார்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தி அசத்தினார். இந்த ஆட்டத்தில் அவர் மொத்தம் 6 விக்கெட்டுகளை சுருட்டினார். 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார்.
ஷமி 3 விக்கெட்டுகளையும், பிரசித் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இவ்வாறாக 25.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து அணி 110 ரன்களை மட்டுமே எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடுகிறது.
3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.